குட்டை, குளங்களில் இருந்து மணல் எடுக்க அரசு அனுமதி - மாவட்ட கலெக்டர் தகவல்


குட்டை, குளங்களில் இருந்து மணல் எடுக்க அரசு அனுமதி - மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 July 2019 3:30 AM IST (Updated: 11 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

குட்டை, குளங்களில் இருந்து மணல் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாவட்டத்தில் உள்ள பாசன குட்டைகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணைத் தூர்வாரி அதன் தண்ணீர் கொள்ளவை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நீராதாரங்கள் அனைத்தையும் முழுமையாக தூர்வாரி அதனை கொண்டு வேறு இடங்களில் கொட்டுவதற்கு அரசு மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது.

எனவே குட்டை, குளங்களை தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடுத்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) 1977 விதிகளில் திருத்தம் செய்து அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட பாசன குட்டைகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட துணை கலெக்டரிடம் (வருவாய்) இருந்து எம்.எம்.-12 மனுவை சமர்ப்பித்து உரிம தொகையாக மாட்டு வண்டி ஒன்றுக்கு ரூ.50-ம், டிராக்டர் ஒன்றுக்கு ரூ.100-ம், லாரி அல்லது டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூ.150-ம் செலுத்தி போக்குவரத்து இசைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி நீராதாரங்களை மேம்படுத்தும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story