குண்டடத்தில், காரில் விவசாயி வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
குண்டடத்தில் காரில் விவசாயி வைத்து இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குண்டடம்,
குண்டடத்தை அடுத்த ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 44). விவசாயி. இவர் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள ஒரு வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவதன்று வங்கிக்கு காரில் சண்முக சுந்தரம் வந்தார். பின்னர் வங்கியில் இருந்து ரூ. 2 லட்சத்து 10ஆயிரத்தை எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு, காரில் திரும்பினார்.
பின்னர் குண்டடம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அப்போது பணப்பையை காரில் வைத்து விட்டு காரின் கதவை பூட்டி சென்றார். ஆனால் காரின் கண்ணாடியை முழுவதும் இறக்கி விடவில்லை. இதனால் காரின் கண்ணாடி திறந்து இருந்தது. பின்னர் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து விட்டு மீண்டும் காரை எடுக்க வந்தபோது காரில் வைத்திருந்த பணப்பையை காணவில்லை.
கிராம நிர்வாக அதிகாரியை சண்முக சுந்தரம் சந்திக்க சென்றதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், அந்த குறிப்பிட்ட நேரத்தில் காருக்குள் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இந்த பணப்பையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முக சுந்தரம் இது குறித்து குண்டடம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காருக்குள் வைத்து இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story