சின்னாளபட்டி அருகே, அரசு பஸ் டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை-பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சின்னாளபட்டி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சின்னாளபட்டி,
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே ஆர்.எம்.டி.சி. நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி லீலாவதி (வயது 55). இவர்களுடைய மகள் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமலிங்கம் இறந்து விட்டார். இதனால் லீலாவதி மட்டும் ஆர்.எம்.டி.சி. நகரில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு அவர் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று தங்கினார்.
நேற்று முன்தினம் காலையில் லீலாவதி வீடு திரும்பினார். வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அங்கு பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் உள்ள பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பதை பார்த்து லீலாவதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் ‘ரூபி’ வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் இருந்து சின்னாளபட்டி-மதுரை 4 வழிச்சாலை வரை மோப்ப நாய் ஓடிபோய் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் தடயவியல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார். திருட்டு சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story