மனுநீதிநாள் முகாமில் ரூ.6 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
குமாரபாளையம் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் மனுநீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, 123 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு ரத்தசோகை நோய் தாக்கம் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை போக்குவதற்கு பெண்கள் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் மனவளர்ச்சி குறைவு மற்றும் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையாத குறைபாடுகளுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்ப காலத்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனை பெற்று சத்தான காய்கறிகள், கீரைகளை உட்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டமாகும். வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து குறைந்த நீரை கொண்டு நிறைந்த மகசூலை பெறுவதோடு, நீர் சேமிப்பிற்கும் உதவிட வேண்டும். மேலும் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான ஆலோசனைகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிற அனைத்து திட்டங்களையும், சலுகைகளையும் பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தினையும், பொருளாதாரத்தினையும் மேம்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி அம்மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜெகதீசன், குமாரபாளையம் தாசில்தார் தங்கம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story