பொன்னியாறு - திருமணிமுத்தாறு பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு
மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தி பொன்னியாறு - திருமணிமுத்தாறு பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஜல்சக்தி அபியான் குழுவினரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் குழுவின் தலைவர் ரஞ்சித்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருமணி முத்தாறு ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகிறது. மழை காலங்களில் மட்டும் நீர்வரத்து இருக்கும். எனவே மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரிநீரை செத்தமலை, பூலாம்பட்டி, எடப்பாடி, மங்களம் ஏரி வழியாக செல்லும் வகையில் நீர்வழி பாதைகளை சீரமைத்து திருமணி முத்தாறுடன் இணைக்கவேண்டும்.
இதேபோல் பொன்னியாறு கஞ்சமலையில் உற்பத்தியாகிறது. கனமழை காலங்களில் மட்டுமே சிறிதளவு நீர் வரும். மற்ற காலங்களில் பொன்னியாற்றின் நீர் வழிப்பாதை வறண்டு கிடக்கிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரிநீரை மகுடஞ்சாவடி, மங்களம் ஏரி வழியாக செல்லும்படி பொன்னியாற்றுடன் இணைக்க வேண்டும்.
மங்களம் ஏரியில் இருந்து மல்லசமுத்திரம் பெரிய ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி பொன்னியாறு வழியாக கொன்னையார் என்ற இடத்தில் திருமணிமுத்தாறில் கலக்கின்றன.
காவிரி - பொன்னியாறு - திருமணிமுத்தாறு திட்டம் கடந்த 1959-ம் ஆண்டு தீட்டப்பட்டு, 1960-ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் என வகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதன்பிறகு பணி தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பொன்னியாறு - திருமணிமுத்தாறு பாசன திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்த நதிகள் பாயும் பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேட்டூர் உபரிநீர் பொன்னியாறு - திருமணி முத்தாறு வழியாக செல்லும்போது அதன் அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழையளவு குறைவாக இருக்கும்போது இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பாசன பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் தவிர்க்கலாம். எனவே இந்த திட்டம் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story