ஈரோடு ரெயில் நிலையத்துக்கு, தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை


ஈரோடு ரெயில் நிலையத்துக்கு, தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாட்ஷா இந்திய ரெயில்வே போர்டு தலைவருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு,

ஈரோட்டில் ரெயில் நிலையம் மற்றும் தண்டவாளப்பணிகள் நடந்தபோது, ஈரோட்டில் தந்தை பெரியாரின் தகப்பனார் வெங்கடப்ப நாயக்கர் அவரது சொந்த விவசாய நிலத்தை ரெயில்வேக்கு தானமாக வழங்கியதுடன், பணிக் காக தனது பணியாளர்களையும் அனுப்பினார். லண்டனை சேர்ந்த பார்க்கர் நிறுவனத்தினர் இந்த பணியை நிறைவேற்றினார்கள். அதன்பின்னர் 1865-ம் ஆண்டு ஈரோட்டில் ரெயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது. முதன் முதலில் ரெயில் நிலையம் வெண்டிபாளையத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் தந்தை பெரியாரின் முயற்சியால் 1925-ம் ஆண்டு தற்போதைய ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது.

ரெயில் நிலையத்துக்காக இடம் கொடுத்த அண்ணாமலை பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது மகன் டாக்டர் முத்துக்குமாரசாமி என்பவரது பெயரை ரெயில் நிலையம் அமைந்து உள்ள சென்னிமலை ரோடு பகுதிக்கு தந்தை பெரியார் சூட்டினார். எனவே ஈரோடு ரெயில் நிலையம் அமைய காரணமாக இருந்தவரும், சமுதாய சீர்திருத்தவாதியாக, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண் அடிமைத்தன ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பெயரை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று ஈரோடு மக்களின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறி உள்ளார்.

Next Story