நாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு


நாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 3:11 PM GMT)

நாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணியானது நடைபெற்றது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேரணி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பெண்கள் பள்ளி சந்திப்பு வழியாக பெண்கள் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று  நிறைவடைந்தது.

இந்த பேரணியில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்றனர். “தாய் சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு, மக்கள் தொகை பெருக்கம் தனி மனித முன்னேற்றத்தை தடுக்கும்“ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ–மாணவிகள் பேரணியாக சென்றனர்.

மேலும் பேரணி புறப்படுவதற்கு முன்னதாக பழனியாபிள்ளை தலைமையிலான கிராமிய இசைக்கலைஞர்கள், மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பேரணிக்கு முன் ஒருவர் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று அசத்தினார். இந்த காட்சியை சாலை ஓரத்தில் மக்கள் கூடிநின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பேரணியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் கிளாரன்ஸ் டேவி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story