மாவட்ட செய்திகள்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்:அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் + "||" + Vellore Parliamentary Election: Digg Alliance candidate AC Shanmugam filed for nomination

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்:அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்:அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளிலேயே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் சுயேச்சை வேட்பாளர்கள் காந்தி வேடமணிந்தும், பின்னோக்கி நடந்தும் வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியதால் காலை முதலே கலெக்டர் அலுவலகம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலை 10 மணிக்கே சுயேச்சை வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுதாக்கல் செய்ய காத்திருந்தனர்.

முதல்நாளான நேற்று அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுதாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் கே.சி.வீரமணி, கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், பா.ஜ.க.வை சேர்ந்த ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருடைய மனைவி லலிதாலட்சுமி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாட்டறம்பள்ளி தாலுகா அக்ராவரம் பகுதியை சேர்ந்த மணிதண் (வயது 50) என்பவர் பின்னோக்கி நடந்து வந்து சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்துள்ளார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும்போது டெபாசிட் தொகையை பணமாக இல்லாமல், காசோலையாக கொண்டு வந்திருந்தார்.

இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர், டெபாசிட் தொகையை பணமாகத்தான் செலுத்தவேண்டும் என்று கூறி, காசோலையை வாங்க மறுத்து விட்டார். இதனால் வேட்புமனுவை மட்டும் கொடுத்துவிட்டு, 18-ந் தேதிக்குள் டெபாசிட் தொகையை செலுத்துவதாக கூறிவிட்டு சென்றார்.

அதேபோன்று நாமக்கல் மாவட்டம் மேற்குபாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த டி.ரமேஷ் (39) என்பவரும் நேற்று சுயேச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். காந்திய கொள்கையை வலியுறுத்தி காந்தி போன்று வேடமணிந்து வந்திருந்தார். இவர் ஏற்கனவே 4 முறை தேர்தலில் போட்டியிட்டிருப்பதாகவும், தற்போது 5-வது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் கே.பத்மராஜனும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் இதுவரை ஜனாதிபதி தேர்தல், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனுதாக்கல் செய்ததாகவும், நேற்று 204-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகமரை கிராமத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன், ஆம்பூர் தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரா.வெங்கடேசன் ஆகியோரும் சுயேச்சை வேட்பாளர்களாக மனுதாக்கல் செய்தனர்.

முதல்நாளான நேற்று மட்டும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 7 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் காந்திவேடமணிந்தும், பின்னோக்கி நடந்து வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த ஏ.சி.சண்முகம் கூறியதாவது:-

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் வலுவான ஆட்சி அமைந்துள்ளது. தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் டெல்லிக்கு சென்றால் கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்க்கதான் முடியும்.

கடந்தமுறை ஏன் தேர்தல் ரத்து செய்யப்பட்டது, யாரால் ரத்து செய்யப்பட்டது என்பதை பொதுமக்கள் தெரிந்து வைத்துள்ளனர். கடந்த 2 மாதத்தில் 3 முறை பிரதமரை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றுள்ளேன். வேலூர் மக்கள் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் மூலமாகத்தான் தீர்க்க முடியும்.

பாலாற்றில் தடுப்பணை, கோதாவரி ஆறு இணைப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்கம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான நான் வெற்றி பெற்றால்தான் முடியும். இதை பொதுமக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். மாற்றுக்கட்சிக்கு வாக்களித்தால் அந்த வாக்கு வீணாகத்தான் போகும்.

நாங்கள் ஏற்கனவே மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறோம், இன்னும் 1,000 முகாம்கள் நடத்தவும் அதேபோன்று வேலைவாய்ப்பு முகாம், படித்த இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி நடத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு திருமண மண்டபம் கட்டப்படும். 660 மாணவர்களுக்கு எங்கள் கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். நாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திப்போம். மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை