நவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்


நவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் நவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய வாகனத்தை உருவாக்கி உள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் எந்திரம் போன்ற பல்வேறு நவீன மருத்துவ எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு செல்லும் இந்த வாகனத்தில் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த மருத்துவ வாகனத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற மற்றவர்களுக்கு பரவாத நோய்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அவசியமாக உள்ளது. இதுபோன்ற நோய்களால் இறப்பவர்களில் 85 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். நோய் வருவதற்கு முன் தடுப்பதே சிறந்தது. அந்த அடிப்படையில் இந்த வாகனம் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும். நவீன மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நீண்ட தூரம் பயணிக்காமல் மக்களை தேடி இந்த வாகனம் வர உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த சேவையை செய்ய முன்வந்திருக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமத்துக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்’ என்றார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை செயல் அதிகாரி சிவக்குமார், மருத்துவ இயக்குனர் ஜலாலி, இணை இயக்குனர் சங்கிடரெட்டி, சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயங் யாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story