பேரணாம்பட்டு அருகே வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது
பேரணாம்பட்டு அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 900 சிக்கியது.
பேரணாம்பட்டு,
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி மலை கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் லோகபிரியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், போலீஸ்காரர் ரமாபாய் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து சோதனையிட்டனர். காரில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 900 இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்காருபேட்டையை சேர்ந்த அரசி என்ற பெண் நாகை மாவட்டத்தில் தனியார் பள்ளி நடத்தி வருவதாகவும், பள்ளி கட்டணம் பெறப்பட்ட தொகை என தெரிவித்தார்.
ஆனால் போதிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பேரணாம்பட்டு தாசில்தார் செண்பகவள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story