காட்பாடி பகுதியில் மின்இணைப்பு கிடைக்காததால் நலிந்துவரும் கயிறு தயாரிப்பு தொழில்


காட்பாடி பகுதியில் மின்இணைப்பு கிடைக்காததால் நலிந்துவரும் கயிறு தயாரிப்பு தொழில்
x
தினத்தந்தி 12 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி பகுதியில் மின் இணைப்பு கிடைக்காததால் கயிறு தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே தொழிலை மேம்படுத்த மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், குடியாத்தம், அம்மூர், கே.வி.குப்பம் பகுதிகளில் தேங்காய் நார்களில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறையிலும் கயிறு தயாரிப்பது குடிசைத்தொழில் போன்று நடைபெற்று வருகிறது. இந்தப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக இந்த தொழிலில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. குடியிருக்க வீடின்றி அவர்கள் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள். இருக்கும் இடத்திற்கும் பட்டா கிடையாது.

இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்துடன் குறிப்பாக பெண்கள் இந்த கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கிளித்தான்பட்டறையில் காட்பாடியில் இருந்து குடியாத்தம்செல்லும் ரோட்டின் ஓரத்தில் எங்குபார்த்தாலும் பெண்கள் கயிறு தயாரிப்பதையே பார்க்க முடிகிறது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் அதிகஅளவில் தேங்காய் விளைவதால் அங்கு தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் தொழிற்சாலை 10-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இங்கிருந்து நார்களை வாங்கி வந்து இவர்கள் கயிறு தயாரித்து வருகிறார்கள். குடியாத்தத்தில் 35 கிலோ எடைகொண்ட ஒரு கட்டு தேங்காய் நார்களை ரூ.850 கொடுத்து வாங்கி வருகிறார்கள்.

பின்னர் ஒருநாளைக்கு முன்னதாக அதை மீண்டும் தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் காயவைத்து பின்னர் அதை கயிறாக தயாரிக்கிறார்கள். ஒருபெண் இயந்திரத்தை இயக்க 2 அல்லது 3 பெண்கள் தேங்காய் நார்களை அதில் கோர்த்து கயிறாக மாற்றுகிறார்கள். இதில் உயர்ந்த கட்டிடங்களில் கட்டி பெயிண்டு அடிக்கவும், கிணறுகளில் தூர்வாருவதற்கும் பயன்படுத்த பெரிய அளவிலான கயிறு தயாரிக்கப்படுகிறது. அடுத்து புதிய வீடுகளில் சாரம் கட்டுவதற்கு சிறிய கயிறும், கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தனியாகவும் என 3 வகையான கயிறு தயாரிக்கிறார்கள்.

அதில் சாரம் கட்டுவதற்காக தயாரிக்கப்படும் கயிறு ஒன்று 4 ரூபாய்க்கும், பெயிண்டு அடிக்க தயாரிக்கப்படும் கயிறு 100 அடி ரூ.120-க்கும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் கயிறு 40 அடி ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் பெரும்பாலும் சித்தூர், திருப்பதி பகுதிகளுக்கு அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள மொத்த விற்பனை கடைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒருநாள் முழுவதும் கயிறு தயாரித்தால் ரூ.120 முதல் ரூ.150 வரை கூலியாக கிடைப்பதாகவும், மழைக்காலம் என்றால் கயிறு தயாரிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தற்போது பெரும்பாலான இடங்களில் மின்சாரம் மூலம் கயிறு தயாரிக்க தொடங்கிவிட்டதால், அவ்வாறு தயாரிக்கும் கயிறு குறைந்த விலைக்கு கிடைப்பதால், கையால் தயாரிக்கப்படும் கயிறுகள் விற்பனை குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் ரூ.250-க்கு ஒரு கட்டு நார் வாங்கியபோதும், தற்போது 850- ரூபாய்க்கு நார் வாங்கும்போதும் கயிறு விலைமட்டும் உயரவில்லை, இதனால் கயிறு தயாரிக்கும் தொழில் நலிந்துவருவதாக கூறுகின்றனர்.

கயிறு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் படிக்காத பெண்கள் மட்டுமின்றி பட்டதாரிகள், செவிலியர் படிப்பு முடித்தவர்கள், என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் சாமுண்டீஸ்வரி என்ற பெண் வக்கீலும் இந்த கயிறு தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தனது தந்தை சிறுவயதில் இருந்தே இந்த தொழிலை செய்துவருவதால் அவருக்கு உதவியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

இப்படி பாமர பெண்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் இந்த தொழிலில் ஈடுபட்டாலும் போதிய லாபம் கிடைக்கவில்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் கையால் கயிறு தயாரிக்கவேண்டிய நிலை உள்ளது. எனவே மின் இணைப்பு கேட்டால் தொழில் நடைபெறுவது புறம்போக்கு இடம் என்பதால் மின் இணைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். எனவே கயிறு தயாரிப்பதற்கு மின் இணைப்பு கொடுத்து, தொழில் வளர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story