திருமண ஆசை காட்டி, 13 வயது சிறுமியை கடத்திய பீகார் வாலிபர் - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை


திருமண ஆசை காட்டி, 13 வயது சிறுமியை கடத்திய பீகார் வாலிபர் - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 12 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசைகாட்டி கோவையை சேர்ந்த 13 வயது சிறுமியை பீகார் வாலிபர் கடத்திச்சென்றார். அவர்களைபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன்குமார் (வயது19). இவர் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரில் தங்கி அங்குள்ள மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் ஒரு பெண் வேலைபார்த்து வருகிறார். அவருடைய 13 வயது மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். மில் குடியிருப்பில் நிரஞ்சன்குமார் உள்பட பலரும் தங்கி இருந்தனர்.

அப்போது, 13 வயது சிறுமியுடன் நிரஞ்சன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். மேலும் அவர் சிறுமியை பீகாருக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை முதல் சிறுமியை காணவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நிரஞ்சன்குமாரும் மாயமானார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து நிரஞ்சன்குமாருடன் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுமியை, நிரஞ்சன்குமார் ரெயிலில் பீகாருக்கு கடத்தி சென்றுவிட்டதாகவும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தன்பாத் செல்லும் ரெயிலில் எஸ்.7 பெட்டியில் சிறுமியுடன் தனக்கும் சேர்த்து நிரஞ்சன்குமார் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்ததாகவும் தெரிவித்தனர்.

உடனே பீளமேடு போலீசார் கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தன்பாத் ரெயில் மதியம் 12 மணிக்கு கோவைக்கு வந்து செல்லும் என்றனர். இந்த நிலையில் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்த தன்பாத் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் ரெயிலில் நிரஞ்சன்குமார் மற்றும் அந்த சிறுமி ஆகியோர் இல்லை. இதனால் போலீசார் தேடுவதை அறிந்து கோவை ரெயில் நிலையத்துக்கு வராமல் வெளியூருக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தன்பாத் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தியதால் சற்று தாமதமாக கோவையில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

இதையடுத்து திருப்பூர், ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கோவை வழியாக செல்லும் வடமாநில ரெயில்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நிரஞ்சன்குமார் மற்றும் சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை, வட மாநில வாலிபர் கடத்திச் சென்ற சம்பவம் கோவையில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story