ஆரோக்கியமாக வாழ்வதற்கு திட்டமிடுவது அவசியம் கலெக்டர் சிவஞானம் பேச்சு


ஆரோக்கியமாக வாழ்வதற்கு திட்டமிடுவது அவசியம் கலெக்டர் சிவஞானம் பேச்சு
x
தினத்தந்தி 11 July 2019 9:30 PM GMT (Updated: 11 July 2019 5:55 PM GMT)

ஆரோக்கியமாக வாழ்வதற்கு திட்டமிடுவது அவசியம் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.

விருதுநகர்,

உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு அலுவலர்கள், விருதுநகர் செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

இந்த ஊர்வலம் மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலக வளாகம் வரை சென்றடைந்தது.

இதைதொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற உலக மக்கள் தொகை-2019 குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியவதாது:-

மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 11-ந்தேதியை “உலக மக்கள் தொகை தினம்“ என அறிவித்தது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தின கருப்பொருள் “தாய்சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு“.

தமிழக அரசு தாய் சேய் நலன் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்கள் பற்றியும், அதன் சேவைகள், அதனுடைய பயன்கள், பயன்களை பெறுவதற்கான அணுகுமுறைகள் பற்றியும் வட்டார மருத்துவ அலுவலர்கள், கிராமம் மற்றும் நகர்ப்புற செவிலியர்கள் நன்கு தெரிந்து கொண்டு பொதுமக்களுக்கு அத்திட்டங்களின் பயன்கள் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும். சமுதாயத்தில் பொதுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்வு பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்பு வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கு திட்டமிட்டு வாழ்வது இன்றியமையாதது. ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதாரம் வளர்ந்திருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் முன்னேற்றம் காண்பது கடினம். எனவே ஒவ்வொருவரும், சிறுகுடும்ப நெறியை பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து வளமுடன் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், ராம்கோ நிறுவனத்தின் மூலம் கர்ப்பிணிகள் ஒவ்வொருவரும் கருத்தரித்த நாள் முதல் பிரசவ காலம் வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய தாய் சேய் நல விழிப்புணர்வு கையேட்டினை கலெக்டர் வெளியிட்டு, 25 கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்.

பின்னர், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், இணை இயக்குனர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மனோகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story