முதுமலை புலிகள் காப்பகத்தில், சிங்காரா வனப்பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது


முதுமலை புலிகள் காப்பகத்தில், சிங்காரா வனப்பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 5:55 PM GMT)

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் சிறுத்தைப்புலி இறந்தது கிடந்தது.

மசினகுடி, 

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், புலிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் தினந்தோறும் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் சிங்காரா வனப்பகுதிக்கு உட்பட்ட மருந்து குடோன் பகுதியில் நேற்று காலை சிங்காரா வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இதனைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக இதுகுறித்து வனச்சரகர் காந்தனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் மற்றும் மசினகுடி கால்நடை மருந்துவர் கோச்சலன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கட்டிடத்திற்குள் இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடல் வெளியில் எடுத்து வரபட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் இறந்த ஆண் சிறுத்தைப்புலி என்றும், சுமார் 5 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது. சிறுத்தைப்புலி உடல் நலக்குறை ஏற்பட்டு இறந்து இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் அதன் உடற்கூறு பாகங்கள் சேகரிக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தைப்புலியின் உடல் அதே இடத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Next Story