கூடலூர் பகுதியில், ரம்புட்டான் பழ விளைச்சல் அதிகரிப்பு - கிலோ ரூ.300-க்கு விற்பனை


கூடலூர் பகுதியில், ரம்புட்டான் பழ விளைச்சல் அதிகரிப்பு - கிலோ ரூ.300-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 5:56 PM GMT)

கூடலூர் பகுதியில் ரம்புட்டான் பழங்கள் அதிகளவு விளைந்துள்ளது. தற்போது கிலோ ரூ.300-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர்,

பல்லுயிர் வளம் மிக்க மேற்கு மலைத்தொடரில் சுமார் 7,402 வகை பூக்கும் தாவரங்களும், 1,814 பூக்காத தாவரங்களும், மூலிகை செடிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர பழவகை மரங்களும் உள்ளது. மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ள கூடலூர் பகுதியில் சமவெளி பகுதியில் விளையும் பழங்கள் மட்டுமின்றி குளிர்ந்த மலைப்பிரதேசங்களிலும் விளையும் மங்குஸ்தான், ஸ்ட்ராபெர்ரி, பட்டர் புரூட், துரியன், பேஷன் புரூட், பிளம்ஸ் உள்பட பல்வேறு ரகங்களும் விளைகிறது.

இதுதவிர இந்தியன் செர்ரி, அத்தி, நாவல், பம்பிளிமாஸ் பழங்களும் விளைகிறது. கடந்த 2 மாதங்களாக ஸ்டார் புரூட் விளைச்சல் காணப் படுகிறது. தற்போது ரம்புட்டான் பழங்கள் அதிகளவு விளைந்துள்ளது. கூடலூர், நாடுகாணி, தேவாலா, அய்யன்கொல்லி, எருமாடு, மாங்கோடு, பிதிர்காடு உள்பட பரவலாக அனைத்து பகுதியிலும் ரம்புட்டான் விளைகிறது. இந்தோனேஷியாவை தாயகமாக கொண்ட ரம்புட்டான் பழம் இந்தியா, மலேஷியா, தாய்லாந்து, கம்போடியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஈகுவடார், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் நீலகிரி, கேரளா, கர்நாடகா உள்பட தென்னிந்திய பகுதியில் பரவலாக விளைகிறது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விளைந்து மார்க்கெட்டுகளுக்கு அதிகமாக வருகிறது. மருத்துவ குணம் வாய்ந்த ரம்புட்டான் பழங்களை கூடலூர் பகுதி விவசாயிகள் பயிரிடுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் பழ விவசாயத்தில் போதிய வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

குளிர் மற்றும் மிதமான வெப்பம் உள்ள காலநிலையில் ரம்புட்டான் விளைகிறது. ஆண், பெண் என இருபால் மரங்கள் உள்ளது. ஆண் மரத்தில் இருந்து பழங்கள் விளைவது இல்லை. ஆனால் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. தற்போது கிலோ ரூ.300-க்கு ரம்புட்டான் பழங்கள் விற்கப்படுகிறது. பச்சை தேயிலைக்கு பல ஆண்டுகளாக விலை கிடைக்காததால் பழ விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறோம். இப்பழ விவசாயத்தின் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story