மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை


மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 6:28 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாகவும், வாய்மொழியாகவும் கூறினர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் சிறுதொழில் தொடங்க வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் 62 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 5 சதவீதம் பேர் கூட பயனடையவில்லை. எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிகளில் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகளின் நிலையை அறிய வங்கி அலுவலர்கள் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும்.

குறைதீர்வு நாட்களில் அதிகாரிகள் எங்களது கோரிக்கை மனுக்களை நேரில் பெற்று கொள்கிறீர்கள். ஆனால் சாதாரண நாட்களில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை காண நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் படி ஏறி வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி கலெக்டர் அலுவலகத்தில் ‘லிப்ட்’ வசதி செய்து தர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அது விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் உள்ளது. கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விழுப்புரம் கோட்டம் பஸ் வருகிறதா? அல்லது மற்ற பகுதி பஸ் வருகிறதா? என்று அறியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இலவச பஸ்பாஸ் அனைத்து அரசு பஸ்களில் செல்லும் வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை. உண்மையான மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை 100 சதவீதம் நிறைவேற்றி கொடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில கோரிக்கைகளை நீங்கள் தொடர்ந்து முன் வைத்து வருகிறீர்கள். எங்களால் முடிந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வகையான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகைக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அரசு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டும் தான் தொகை வழங்குகிறது. அதன் மூலம் எத்தனை பேருக்கு உதவித்தொகை வழங்க முடியுமோ அத்தனை பேருக்கு வழங்கி வருகிறோம். நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சீனியாரிட்டி அடிப்படையில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார். இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story