நாளை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் வழக்குகள் விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தகவல்


நாளை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் வழக்குகள் விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தகவல்
x
தினத்தந்தி 12 July 2019 4:00 AM IST (Updated: 12 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் மாவட்ட சமரச மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நாளை (சனிக்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும். தற்போது 2-வது மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.

இதில் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய 5 இடங்களில் மொத்தம் 18 அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த அமர்வுகளில் பணியில் உள்ள நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் அமர்ந்து வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளனர். இந்த அமர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, வழக்குகள் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும்.

5 ஆயிரம் வழக்குகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் குடும்பநல வழக்குகள் என சுமார் 5 ஆயிரம் வழக்குகள் இனம் காணப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் இருதரப்பினரும் வரவழைக்கப்பட்டு, அவர்களின் சம்மதத்தின் பேரில் தீர்வு காணப்படும்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதுபோன்ற வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

ரூ.2¾ கோடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் ரூ.79 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 10 வழக்குகளுக்கும், மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான 25 வழக்குகளுக்கும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் வரையிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

அதேபோன்று கோர்ட்டுக்கு விசாரணைக்கு வரும் முன்பே தீர்வு காணப்படும் வங்கி சார்ந்த வழக்குகளில் இதுவரை 756 வழக்குகள் எடுக்கப்பட்டு 102 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.80 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை ரூ.2 கோடியே 72 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.

பங்கேற்க வேண்டும்

நாளை சுமார் ரூ.7 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது. வழக்காடிகள், பணம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்பநல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் உடனடியாக தீர்வு காணலாம். இதில் தீர்வு கண்டால் மேல்முறையீடு கிடையாது. சம்பந்தப்பட்ட வழக்காடிகள் செலுத்தி உள்ள கோர்ட்டு கட்டணம் உடனடியாக திருப்பி கொடுக்கப்படும். வங்கியில் கடன் பெற்று உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முழுமையாக வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இந்த மக்கள் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்காடிகளும் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பாக வழக்காடிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் கூறினார். பேட்டியின்போது மகிளா கோர்ட்டு நீதிபதி குமார சரவணன், கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story