அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களுக்கு நேரில் வாழ்த்து


அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களுக்கு நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 12 July 2019 4:00 AM IST (Updated: 12 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நெல்லை, 

நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா-சிவகாமி தம்பதி மகள் ஜெயலட்சுமி, திருமலைகொழுந்துபுரம் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் சுப்பிரமணியன்-முத்துலட்சுமி தம்பதி மகன் ஸ்ரீராம் திருமண விழா பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாலையில் திருமண வரவேற்பு விழா நடந்தது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா இருந்தபோது அவரது மனதில் இடம் பிடித்தவர் பாப்புலர் முத்தையா. அவர் பல ஆண்டுகளாக எனது இனிய நண்பராகவும் உள்ளார், அந்த நட்பின் அடிப்படையில், கழகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறவர், உயர்ந்த குணம் கொண்டவரின் விழாவில் பங்கேற்று உள்ளேன்.

என்னுடைய வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ, அதே போல் இந்த திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் பல்லாண்டு, பல்லாண்டு எல்லா வளங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள்

இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழாவுக்கு வந்திருந்தவர்களை பாப்புலர் முத்தையா-சிவகாமி, டாக்டர் சுப்பிரமணியன் -முத்துலட்சுமி, பாப்புலர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் வரவேற்றனர்.

தொண்டர்கள் வரவேற்பு

முன்னதாக தாழையூத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு முதல்-அமைச்சரை வரவேற்றார்கள்.

Next Story