சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம் சிறை வார்டன் வெட்டிக்கொலை 2 கார்களில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்


சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம் சிறை வார்டன் வெட்டிக்கொலை 2 கார்களில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 11 July 2019 11:15 PM GMT (Updated: 11 July 2019 6:41 PM GMT)

சேலத்தில் சிறை வார்டன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 2 கார்களில் வந்த மர்ம கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது.

சூரமங்கலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அருகே அய்யம்பெருமாம்பட்டி மூலக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மாதேஸ் (வயது 28). இவர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். சூரமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வம், நரசோதிப்பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் ஆகியோருக்கு சொந்தமான 2 கார்களை முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு மாதேஸ், அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் களங்காணியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரும்பாலை பிரிவு ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாதேஸ், தனது நண்பர்களுடன் சேர்ந்து ரங்கசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.1,200-ஐ பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சூரமங்கலம் போலீசார் மாதேஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதேசமயம், கார்களுக்கு தீ வைப்பு, வழிப்பறி போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சிறை வார்டன் மாதேசை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மாதேசுக்கு திருமணம் ஆகி வினோதினி (26) என்ற மனைவியும், 11 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், சேலம் புதுரோட்டில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இதையடுத்து அவர் சிவதாபுரம் அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணையை குத்தகைக்கு எடுத்து அதை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று மதியம் மாதேஸ் மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் ஆகியோர் ஆண்டிப்பட்டி சுடுகாடு பகுதியில் மீன் பண்ணை அருகில் உள்ள காலி நிலத்தில் முள்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் மாதேசை ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் தலை, கழுத்து, கால் பகுதியில் வெட்டு காயங்கள் அதிகமாக விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து மாதேஸ் பரிதாபமாக இறந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் வெங்கடேஷ் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மாதேஸ் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து கார்களில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே, முன்னாள் சிறை வார்டன் மாதேஸ் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாதேசை வெட்டிய நபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட மாதேசின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து மாதேசின் உடலை பார்த்து கதறி அழுதனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோத தகராறு காரணமாக அவரை சிலர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் பட்டப்பகலில் முன்னாள் சிறை வார்டனை மர்மகும்பல் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story