தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நடத்தப்படும் பொது வினியோகத்திட்ட ரேஷன்கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும், தாலுகா அளவிலான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் தேர்வு செய்யப்பட்ட ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை) தாலுகா வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இதன்படி ஆழிவாயன்கொட்டாய் (தர்மபுரி), ஆணைக்கல்லனூர் (பென்னாகரம்), சிக்கமாரண்டஅள்ளி (பாலக்கோடு), பையர்நாயக்கன்பட்டி-மோட்டூர் (அரூர்), தோழனூர் (பாப்பிரெட்டிப்பட்டி), பன்னாகனஅள்ளி (நல்லம்பள்ளி), தும்பலஅள்ளி (காரிமங்கலம்) ஆகிய 7 இடங்களில் உள்ள ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.
இந்த குறைதீர்க்கும் முகாம்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே மேற்கண்ட ஊர்களில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் கோரிக்கை மனுக்களில் குறிப்பிடப்படும் குறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உடனுக்குடன் குறைகளை நிவர்த்தி செய்வார். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தர்மபுரி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story