திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி வருசாபிஷேக விழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வீதி உலா
பின்னர் காலை 9.05 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள், கோவில் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 9.20 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானங்களுக்கு புனித நீரால் வருசாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் புனிதநீரால் வருசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திரளான பக்தர்கள்
விழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், கோவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், மாரிமுத்து உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story