உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 July 2019 3:30 AM IST (Updated: 12 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, கொடியசைத்து, பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் தொகை குறித்த உறுதிமொழியினை கலெக்டர் ஷில்பா தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் குடும்ப நல திட்டம் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தாய்சேய் நலத்தை மேம்படுத்தி அதன் மூலம் பிறப்பு விகிதத்தையும் குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 19 வட்டாரங்களில் நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் உயர்வரிசை பிறப்பு அதிகமாக காணப்படுவதால் இந்த நான்கு வட்டாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குடும்பநல திட்டத்தை சிறப்பாக செயல்படுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

இறப்பு விகிதம்

குடும்பநல திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதால் பிரசவத்தின் போது குழந்தைகள், தாய் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மக்கள் திட்டமாக அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், பிரசவத்திற்கு 108 வாகன வசதி மற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவத்திற்கு வாகன வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களினால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்்.

மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இன்றியமையா தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் சிறந்த சமுதாய சூழ்நிலை ஆகியவை அனைத்தும் மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க வழி பிறக்கும். எனவே ஒவ்வொருவரும் சிறுகுடும்ப நெறியை பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து வளம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை துணை இயக்குனர் வசந்தகுமாரி, துணை இயக்குனர், செந்தில்குமார், மாநகர நல அலுவலர் சதீஷ்குமர், தொழு நோய் பிரிவு துணை இயக்குனர் ஆஷா, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் டேவிட் அப்பாத்துரை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story