உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்


உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கரையில் உள்ள மாவட்ட பெருந்திட்ட அலுவலக நுழைவு வாயிலில் நேற்று நடந்தது. ஊர்வலத்தை திட்ட இயக்குனர் (ஊராட்சிகளின் முகமை) சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, கிறிஸ்டோபர் செவிலியர் கல்லூரி, பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ- மாணவிகள் “ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் பிறப்பு இடைவெளி 3 ஆண்டுகள் அவசியம்”, “குழந்தை ஆணா, பெண்ணா என நிர்ணயிப்பது ஆணின் உயிரனுவே”, “அளவான குடும்பம், வளமான வாழ்வு” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். ஊர்வலம் ரோவர் ஆர்ச் வரை சென்று மறுபடியும் பாலக்கரை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் துணை இயக்குனர் (மருத்துவம்) சிவப்பிரகாசம் உஷ, பொது சுகாதாரத் துறையின் திட்ட மேலாளர் கலைமணி, புள்ளியியல் உதவியாளர் கோடீஸ்வரன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. கருத்தரங்கில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story