பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு சுகப்பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது


பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு சுகப்பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 12 July 2019 3:00 AM IST (Updated: 12 July 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நெல்லை, 

பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

நெல்லை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மீனாட்சிபுரம், சமாதானபுரம், பேட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற விஜயலட்சுமி, மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்தல், தூய்மைப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிகளை துரிதமாக செய்து வரும் நிலையில், 9 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவி செவிலியர்களுக்கு கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பான மருத்துவ பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.

பெண்ணுக்கு சுகப்பிரசவம்

இந்த நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜான்பால் மனைவி ஜெயஸ்ரீக்கு சுகப்பிரசவமாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது பாளையங்கோட்டையில் தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த முதல் குழந்தையாகும். குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். சுகப்பிரசவம் பார்த்த டாக்டர் தமிழரசி மற்றும் செவிலியர்களை மாநகராட்சி ஆணையாளர் பாராட்டினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story