உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்


உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 7:57 PM GMT)

கரூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

கரூர்,

மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளை உணர்த்தும் வகையிலும், மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அரசு கலைக்கல்லூரி, தனியார் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடியே தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் சென்றனர். பின்னர் இந்த ஊர்வலமானது அரசு கலைக்கல்லூரியில் நிறை வுற்றது.

பெண் கல்வி

அதனைத்தொடர்ந்து, தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடந்தது. இதற்கு தலைமை தாங்கி மாவட்ட கலெக்டர் அன்பழகன் பேசுகையில்,

பொதுமக்களிடையே குடும்பநல விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான குடும்பநல முறைகளை பின்பற்ற அறிவுறுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவது இந்த தினத்தை அனுசரிப்பதின் நோக்கமாகும். இந்த ஆண்டு 30-வது உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கின்றோம். இந்த ஆண்டு “தாய்சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு” என்ற கருத்தை மையமாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகின்றது. கல்வியறிவு அனைவருக்கும் அவசியம். அதிலும் பெண் கல்வி மிகவும் அவசியம் என்றார்.

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னி்ட்டு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் வாசிக்க, அனைவரும் அவரைப்பின் தொடர்ந்து திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை, ஒவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு, சான்றிதழ் களை வழங்கி பாராட்டினார்.

இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் (கரூர்) சந்தியா, துணை இயக்குனர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) ஹீகாந்த், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன், மாவட்ட நகர்நல அதிகாரி ரவிபாலா, அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மகப்பேறு மருத்துவர்கள் சாந்தாதேவி, நித்தியா, நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி செந்தில்குமார், வட்டார விரிவாக்க கல்வியாளர் சாந்திநிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story