சூளகிரி அருகே ஏரிகளை தூர்வாரும் பணி தொடக்கம்


சூளகிரி அருகே ஏரிகளை தூர்வாரும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 July 2019 3:15 AM IST (Updated: 12 July 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே ஏரி, கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், “ஜல் சக்தி அபியான்” திட்டம் சார்பில், தொண்டு நிறுவனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஏரிகளை தூர் வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் மழைநீரை முறையாக சேகரிப்பது தொடர்பாக கலெக்டர் எஸ்.பிரபாகரிடம், தொழிற்சாலை பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் சொந்த நிதியில் பணிகளை மேற்கொள்ள உறுதியளித்தனர்.

அதன் அடிப்படையில், நேற்று சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஸ்தலப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியை, தூர் வாரும் பணி தொடங்கியது. இதையொட்டி ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், ஏரிக்கு நீர் வரும் கால்வாய் மற்றும் நீர் வெளியேறும் மதகு பகுதிகளை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ் சாமுவேல், விமல்ரவிகுமார், தாசில்தார் ரெஜினா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story