ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்ட நீர்ஆதாரங்கள் மேம்படுத்தப்படும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை பொருளாதார ஆலோசகர் பேச்சு


ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்ட நீர்ஆதாரங்கள் மேம்படுத்தப்படும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை பொருளாதார ஆலோசகர் பேச்சு
x
தினத்தந்தி 11 July 2019 9:30 PM GMT (Updated: 11 July 2019 8:23 PM GMT)

ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்ஆதாரங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை பொருளாதார ஆலோசகர் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நீர்பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சக ஊரக வளர்ச்சித்துறை பொருளாதார ஆலோசகர் சுஜாதா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ‘ஜல்சக்தி அபியான்’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்து அதன் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நீர் பற்றாக்குறை கண்டறியப்பட்ட 255 மாவட்டங்களை நீர்வளமிக்க மாவட்டங்களாக மாற்றுவதற்காக மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இணைசெயலாளர் அளவில் ஒரு அதிகாரி, பொறுப்பு அதிகாரி, தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர். இந்த இயக்கத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்து நிலத்தடி நீரை மேம்படுத்துவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வனத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ‘ஜல் சக்தி அபியான்’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து, நீர்நிலைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்சிக்கனத்தை வலியுறுத்துதல், பாரம்பரிய நீர்நிலைகள் மற்றும் நீர் ஆதாரங்களை புதுப்பித்தல், பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, நீர்வடி மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் ஆகிய 5 குறிக்கோள்களை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதில் புதிய தடுப்பணைகள் கட்டுதல், குளம் மேம்பாடு செய்தல், நீர் உறிஞ்சு குழிகள் அமைத்தல் மற்றும் கசிவுநீர் குட்டைகள் அமைத்தல், நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும், தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 134 குடிமராமத்து பணிகளை சிறப்பான முறையில் விவசாய சங்கங்களுடன் இணைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் நிலைகளின் பராமரிப்பு பணிகளால் எதிர்வரும் காலங்களில் நாம் பெறக்கூடிய மழைநீரால் ஏரி, குளங்கள், அணைகள் ஆகியவை நிரம்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினர்களான மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி ஜெரால்டு, பழங்குடியினர் விவகாரங்கள் துறை இயக்குனர் அனில்குமார் அடப்பள்ளி, உள்நாட்டு விவகாரங்கள் இயக்குனர் ராம்கிரு‌‌ஷ்ண ஸ்வரன்கர், சுரங்கத்துறை அமைச்சக இயக்குனர் ஆதிராபாபு, மத்திய அமைச்சகத்தின் உயிர்-தொழில் நுட்பத்துறை அதிகாரி நரசிம்மன், நிதிபராமரிப்பு சேவையின் துணை செயலாளர் குலாப்சிங், மத்திய நீர்வள ஆணையத்தின் துணை இயக்குனர் ஹர்தே‌‌ஷ் குமார், மத்திய நீர்வள ஆணையத்தின் இணை இயக்குனர் ராஜேந்திரன், மத்திய நீர் மற்றும் திறன் ஆராய்ச்சி நிறுவன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மஞ்சுநாத், முகே‌‌ஷ் அரோரா, மகாலிங்கையா, பிரகா‌‌ஷ், சவான் மற்றும் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமே‌‌ஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி கமி‌‌ஷனர் சிவக்குமார், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story