‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கனவாகிவிட்டது டி.டி.வி.தினகரன் பேட்டி


‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கனவாகிவிட்டது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 11 July 2019 9:45 PM GMT (Updated: 11 July 2019 8:23 PM GMT)

“நீட் தேர்வால் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கனவாகிவிட்டது” என்று காளையார்கோவிலில் அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

காளையார்கோவில், 

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவரது உருவ படத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்தினார். அவருக்கு கட்சியினர் வீரவேல் பரிசாக வழங்கினர்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

எங்கள் கட்சியை சிலர் லெட்டர் பேடு கட்சி என கேலி செய்தார்கள். ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகளை தேடிப்போய், அவர்களை தங்களது கட்சியில் சேர்த்து வருகின்றனர். எங்கள் கட்சி நிர்வாகிகளைத்தேடி திருநெல்வேலி வரை செல்கின்றனர். இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்துவிடும். நீட் தேர்வால் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கனவாகிவிட்டது.

பொய் வழக்கு போடுவதில் தமிழக காவல்துறையினர் மிகவும் கைதேர்ந்தவர்கள். முகிலன் மீதான வழக்கிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பொய் வழக்கு போடும் போலீசார் அதற்குரிய பலனை அனுபவிப்பார்கள்.

முதலில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கட்டும். அதன்பின் தேசிய நதிகளை இணைக்கலாம். காவிரியில் இருந்து தண்ணீர் பெறுவதே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன்கென்னடி, தேர்போகி பாண்டி, மாவட்ட பொருளாளர் வக்கீல் சக்தி, மாவட்ட துணைச் செயலாளர் மேப்பல்ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.எம்.பி. அண்ணாமலை, இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கோலாந்தி, தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் பாகனேரி மகேந்திரன், மூர்த்தி, மந்தக்காளை, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, மகேந்திரன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story