எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து சபாநாயகர் கருத்து
எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் கருத்து தெரிவித்தார்.
பெங்களூரு,
எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் கருத்து தெரிவித்தார். அவர் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
சட்டப்படி இல்லை
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் பெங்களூருவில் நேற்று காலையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். சில எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை. அவர்கள் மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்தால் அதை பெற்றுக்கொள்வேன். கடிதங்கள் பெற்ற பிறகு அதை பரிசீலித்து முடிவு எடுப்பேன். அந்த முடிவை சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிப்பேன்.
பாதுகாப்பு கொடுக்க...
எனது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வக்கீல்களை நியமித்துள்ளேன். எனது வக்கீல்கள் கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்வார்கள். அடுத்து என்ன உத்தரவுகள் வருகிறதோ என்பதை பார்ப்போம். இங்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மரியாதையுடன் ராஜினாமா கடிதங்களை பெறுவேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story