பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று கூடுமா?


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று கூடுமா?
x
தினத்தந்தி 12 July 2019 3:30 AM IST (Updated: 12 July 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு, 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானாக கவிழ்ந்து விடும்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.

ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். அதாவது கூட்டணி அரசின் எம்.எல்.ஏ.க்களின் பலம் சபாநாயகரை தவிர்த்து 100 ஆக குறைந்துவிடும். தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

குமாரசாமி முடிவு

அப்படி சட்டசபை கூட்டம் நடந்தால், பா.ஜனதா கட்சி, ஆளும் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தை எழுப்ப முடிவு செய்துள்ளது. குமாரசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபை கூட்டத்தை நடத்தவிடாமல் முடக்க பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தொடரில் நிதி மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு பெரும்பான்மை பலம் தேவை.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், இந்த அரசின் பலம் குறைந்துள்ளது. அவர்களின் கடிதத்தை சபாநாயகர் அங்கீகரிக்கும் வரை அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவே தொடருவார்கள். அதனால் அரசின் பலம் அப்படியே இருக்கிறது என்பது தான் அர்த்தம்.

திட்டமிட்டபடி நடக்குமா?

இந்த நிலையில் எக்காரணம் கொண்டும் சட்டசபை கூட்டத்தை ரத்து செய்யமாட்டேன், கண்டிப்பாக கூட்டத்தை நடத்துவேன் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியிருந்தார். அதேபோல் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா அளித்த ஒரு பேட்டியில், கர்நாடக சட்டசபை கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதனால் இன்று(வெள்ளிக்கிழமை) சட்டசபை கூட்டம் திட்டமிட்டபடி நடை பெறுமா? என்று கர்நாடக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story