தஞ்சை சோழன்சிலை பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைப்பதை கைவிட வேண்டும்


தஞ்சை சோழன்சிலை பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைப்பதை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 12 July 2019 4:30 AM IST (Updated: 12 July 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை சோழன்சிலை பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைப்பதை கைவிட வேண்டும் என்று பெரியகோவில் உரிமை மீட்புக்குழு வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உரிமை மீட்புக்குழு சார்பில் அதன் தலைவர் அயனாபுரம் முருகேசன், பொருளாளர் பழ.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இருதயராஜ், முருகையன், பன்னீர்செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்துக்கழக நிர்வாகி துரை.மதிவாணன், வணிகர் சங்க பேரவை வாசு, ரவி, மற்றும் பலர் மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பெரியகோவில் அருகே மாமன்னன் ராஜராஜசோழன் சிலையையொட்டி மாநகராட்சி ஆழ்துளை கிணறு அமைக்கிறது. 500 அடி வரை ஆழம் துளை போடுவதால் பெரியகோவில் மதில்சுவர், கேரளாந்தகன் கோபுரம், பெரியகோவில் கட்டுமானம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

உலக வரலாற்று சின்னம்

கடந்த 2010-ம் ஆண்டு பெரியகோவில் வளாகத்திற்குள் ஆழ்துளை கிணறு அமைத்த போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றோம். ராஜராஜசோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெரியகோவில் உலக வரலாற்று சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இப்படி அரிய ஆன்மிக கலை பெட்டமாக விளங்கும் பெரியகோவில் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சும போது பாதிப்பு ஏற்படக்கூடம். எனவே பெரியகோவிலுக்கு வரும் மக்களின் குடிநீர் தேவைக்கும், ராஜராஜசோழன் பூங்கா தேவைக்கும் உரிய தண்ணீரை வெளியில் இருந்து கொண்டு வர வேண்டுமே தவிர, கோவிலுக்கு அருகிலேயே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சக்கூடாது. எனவே ஆழ்துளை கிணறு அமைக்கும்பணியை உடனே கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story