நாமக்கல்லில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாமக்கல்,
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மக்கள்தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, இளம்வயது திருமணங்களை தவிர்க்க வேண்டும், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் ஊர்வலம் முடிவடைந்தது. முன்னதாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவரும் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் தேன்மொழி, துணை இயக்குனர் (குடும்பநலம்) வளர்மதி, துணை இயக்குனர் (தொழுநோய்) ஜெயந்தினி, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணப்பன், வட்டார விரிவாக்க கல்வியாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய அதிகாரிகள், பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சைக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.600-ம், ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறைக்கு ரூ.1,100-ம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது என கூறினர்.
Related Tags :
Next Story