பேராவூரணியில் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு, கடலூர் கலெக்டர் பாராட்டு


பேராவூரணியில் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு, கடலூர் கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர் களுக்கு கடலூர் கலெக்டர் பாராட்டு தெரிவித்து, நிதி உதவி வழங்கினார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. குளத்துக்கு தண்ணீர் வரும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. புதர் மண்டி, வறண்டு கிடந்த இந்த குளத்தை தூர்வார இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்திய இளைஞர்கள் அதன் மூலம், ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு அதிகாரிகளை எதிர்பாராமல், தங்களுடைய சொந்த உழைப்பின் மூலமும், பொதுமக்களிடம் நிதி திரட்டியும், கடந்த 15 நாட்களாக இளைஞர்கள் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்டமாக குளத்தின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். தூர்வாரும் பணியை மேற்பார்வை செய்ய பொறியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் கலெக்டர் பாராட்டு

இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருவது பற்றி தகவல் அறிந்த பேராவூரணியை அடுத்த நாடியம் கிராமத்தை சேர்ந்தவரும், கடலூர் மாவட்ட கலெக்டருமான அன்புச்செல்வன் நேற்று பேராவூரணிக்கு வந்து குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தூர்வாரும் பணிக்காக ரூ.25 ஆயிரம் நிதி உதவியையும் கலெக்டர் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர்கள் வீணாக பொழுதை போக்காமல் குளத்தை தூர்வாரி தண்ணீர் சேமிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் செயல்படுவது பாராட்டத்தக்கது. இதில் இளைஞர்கள் அதிகம் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story