சேலத்தில் 26.6 மில்லி மீட்டர் மழை பதிவு: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
சேலத்தில் நேற்று முன் தினம் 26.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் கிச்சிப் பாளையம் நாராயணன் நகர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். மேலும் வீட்டில் வசித்தவர்கள் தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து வெளியே ஊற்றினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 26.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
எடப்பாடி-14.2, ஏற்காடு-12, பெத்தநாயக்கன் பாளையம்-14, ஓமலூர்-2, ஆத்தூர்-1.4.
இதனிடையே தம்மம்பட்டியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 8.30 மணி வரை இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழை நீர் கலந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப் பட்டனர்.
Related Tags :
Next Story