வாழப்பாடி அருகே, விலையில்லா அரிசி வழங்காததால் ரேஷன்கார்டுகளை கடையில் ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டம்


வாழப்பாடி அருகே, விலையில்லா அரிசி வழங்காததால் ரேஷன்கார்டுகளை கடையில் ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2019 3:30 AM IST (Updated: 12 July 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே விலையில்லா அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்காததால் ஆவேசமடைந்த கிராம மக்கள், ரேஷன் கார்டுகளை நியாயவிலைக்கடையில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி, 

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது பி.கண்ணுக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் 239 குடும்பங்களுக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த கிராமத்தில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்க, நியாயவிலைக்கடையில் (ரேஷன் கடை), விலையில்லா அரிசி உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக 50 சதவீத ரேஷன்கார்டுகளுக்கு மட்டுமே விலையில்லா அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி கிராம மக்கள், நேற்று காலையில் ரேஷன் கடை முன்பு திரண்டு வந்தனர். அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் விலையில்லா அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்காததால் பயன்பாடற்ற ரேஷன்கார்டு தேவையில்லை எனக்கூறி அனைத்து ரேஷன்கார்டுகளையும், நியாயவிலைக்கடையில் ஒப்படைத்து விட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் விலையில்லா அரிசி உள்ளிட்ட மானிய பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி வழங்க, வருவாய்த்துறை அதிகாரிகள் வழியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

போலீசாரின் சமாதானத்தை ஏற்ற கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு ரேஷன்கார்டுகளை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Next Story