தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை
தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்தல், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல், விற்பனை செய்வது முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் 2-வது முறையாக கண்டறியப்படும் போது ரூ.50 ஆயிரமும், 3-வது முறையாக கண்டறியப்படும் போது ரூ.1 லட்சமும் அபராத தொகையாக விதிக்கப்படும். பெரிய அங்காடிகள், ஜவுளிக்கடைகள், பல்நோக்கு வணிக அங்காடிகள் போன்ற வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் வினியோகம் செய்வது முதல் முறை கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரமும், 2-வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.15 ஆயிரமும், 3-வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
மளிகை கடைகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் வினியோகம் செய்வது முதல் முறையாக கண்டறியப்படும் போது ரூ.1,000-மும், 2-வது முறையாக கண்டறியப்படும் போது ரூ.2 ஆயிரமும், 3-வது முறையாக கண்டறியப்படும் போது ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
சிறு, குறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல் மற்றும் வினியோகம் செய்வது முதல் முறையாக கண்டறியப்பட்டால் முதல் முறையாக ரூ.100-ம், 2-வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.200-ம், 3-வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும்.
மேலும் மேற்காணும் நடவடிக்கைகளை கண்காணிக்க, ஊராட்சி மன்ற தனி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி உதவி இயக்குனர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story