காட்கோபர் காமராஜ் நகரில் சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி


காட்கோபர் காமராஜ் நகரில் சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 12 July 2019 4:00 AM IST (Updated: 12 July 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

காட்கோபர் காமராஜ் நகரில் சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மும்பை,

காட்கோபர் காமராஜ் நகரில் சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சுரங்கப்பாதையில் கழிவுநீர்

மும்பை காட்கோபர் கிழக்கில் உள்ளது காமராஜ் நகர் குடிசை பகுதி. மும்பை கிழக்கு விரைவு சாலையை ஒட்டி உள்ள காமராஜ் நகரில் ஏராளமான தமிழர்கள் உள்பட சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மும்பையின் பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், காமராஜர் நகர் அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு செல்பவர்கள் கிழக்கு விரைவு சாலையின் குறுக்கே உள்ள சுரங்க நடைபாதையை பயன்படுத்துகிறார்கள்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் இந்த சுரங்கப்பாதையில் கடந்த பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி வருகிறது.

மக்கள் அவதி

தற்போது மழையும் பெய்து வருவதால் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதை சுகாதார சீர்கேடாய் காட்சி அளிக்கிறது. இதனால் வேறு வழியின்றி அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். சிரமத்துடனேயே சுரங்கப்பாதையில் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் எலிக்காய்ச்சல் போன்ற உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரை அகற்றவோ அல்லது கழிவுநீர் தேங்காமல் தடுக்கவோ மாநகராட்சியினர் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது காமராஜ் நகர் பொதுமக்களின் குமுறலாக இருக்கிறது.

Next Story