விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்


விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 July 2019 4:45 AM IST (Updated: 12 July 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

தனிப்பட்ட முறையில் அல்லாமல் விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

மத்திய மந்திரிகள் தங்கள் துறையின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்து இணையதளம், சமூகவலைதளங்களில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக வெளியிடுமாறு அறிவுறுத்தி இருந்தனர். இதுதொடர்பான செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கவர்னர் கிரண்பெடி அதில் தனது தரப்பு விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:-

பிரதமர் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொண்டதுபோல் புதுவை கவர்னர் மாளிகையில் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தெரியப்படுத்தி வருகிறோம்.

இதற்காக வாட்ஸ்அப், இ-மெயில், கட்டுப்பாட்டு அறை, கருத்துக்கேட்பு, பொதுமக்கள் சந்திப்பு, வாராந்திர களப்பயணம், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட குறைதீர்ப்பு முறை ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு வாரமும் கவர்னர் மாளிகை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோப்புகள் குறித்த விவரங்களை சிறப்பு பணி அதிகாரி தெரிவித்து வருகிறார்.

இதேபோல் ஒவ்வொரு அமைச்சரும், துறை தலைவர்களும் செய்யவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளோம். இது பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செய்யப்பட்டது. இதன்மூலம் தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.

இதற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள், விமர்சனங்கள் குறித்து நாங்கள் பயப்படவில்லை. விமர்சனங்கள் என்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும். மாறாக தனிப்பட்ட முறையில் இருக்கக்கூடாது.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி குறிப்பிட்டுள்ளார்.

Next Story