புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கூலி தொழிலாளி மர்ம சாவு


புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கூலி தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 12 July 2019 4:30 AM IST (Updated: 12 July 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். பஸ் நிறுத்தத்தில் அவரது உடல் கிடந்ததால் உறவினர்கள் ஆத்திரமடைந்து திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 56), கூலி தொழிலாளி. நேற்று காலை காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருடன் மருமகன் கூத்தான் வந்து இருந்தார்.

அங்கு பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மதியத்துக்கு மேல் மருமகன் கூத்தான் மாற்று துணி எடுத்து வருவதாக பாண்டியனிடம் கூறிவிட்டு கிளியனூருக்கு சென்றார். பாண்டியன் மட்டுமே ஆஸ்பத்திரியில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன்பின் இரவு 7 மணி அளவில் கூத்தான் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தபோது, அங்கு பாண்டியனை காணவில்லை.

இதுகுறித்து விசாரித்த கூத்தனிடம் பாண்டியனை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வேன் மூலம் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திருப்பதாக செவிலியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்பின் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவர் விசாரித்தார். அப்போது பாண்டியன் என்று எந்த நோயாளியும் வரவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு வழியின்றி மாமனார் பாண்டியனை அவர் தேடிப்பார்த்ததில் ஜிப்மர் ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பாண்டியன் பேச்சுமூச்சின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்.

அங்கு பாண்டியனை டாக்டர் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் கூத்தான் மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கிளியனூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் திரண்டு வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு சென்று பாண்டியனை எங்களிடம் தெரிவிக்காமல் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மாற்றியது ஏன்? அப்படியே கொண்டு சென்றாலும் பஸ் நிறுத்தத்தில் அவரது உடல் கிடந்தது எப்படி? என்று கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நள்ளிரவுக்குப் பிறகும் போராட்டம் நீடித்தது.

Next Story