கிருமாம்பாக்கம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல் சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம்
கிருமாம்பாக்கம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
பாகூர்,
நாகை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்தவர் ஸ்ரீராமலு (வயது 42). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் பத்மஸ்ரீ (9), தர்ஷன் (6) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திண்டிவனம் நோக்கி வந்தார்.
அப்போது காரைக்கால் கீழகாசக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் (60) புதுவையில் இருந்து காரைக்காலுக்கு காரில் சென்றார். காரில் அவரது மனைவி ஹேமலதா (54), ரவிச்சந்திரனின் அண்ணன் ஜெயராமன் (63), அவருடைய மனைவி எழிலரசி (60) ஆகியோர் இருந்தனர். ரவிச்சந்திரன், ஜெயராமன் ஆகியோர் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் கிருமாம்பாக்கம் அருகே காட்டுக்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது, இரு கார்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் ஸ்ரீராமலு பத்மஸ்ரீ, தர்ஷன் ஆகியோரும், மற்றொரு காரில் வந்த ரவிச்சந்திரன், ஹேமலதா, ஜெயராமன், எழிலரசி ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story