நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு


நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு
x
தினத்தந்தி 12 July 2019 4:00 AM IST (Updated: 12 July 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் அரசு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

விழுப்புரம், 

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தலில் பயன்படுத்த விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கில் உள்ள குடோன் திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அந்த எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பணி கடந்த மே மாதம் 23-ந் தேதி நடந்து முடிந்ததை தொடர்ந்து அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த எந்திரங்களை மீண்டும் விழுப்புரத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் வைப்பதற்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரிகளில் உள்ள பாதுகாப்பு அறையை நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் திறந்தார்.

அதன் பிறகு அங்கிருந்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாமல் இருப்பில் வைக்கப்பட்டிருந்த 1,191 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 961 கட்டுப்பாட்டு கருவிகள், 1,228 வி.வி.பேட் கருவிகள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அவை விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story