மதுரை ரெயில் நிலையத்தில் போலி தண்ணீர் பாட்டில்கள்? பாதுகாப்பு படை போலீசார் சோதனை


மதுரை ரெயில் நிலையத்தில் போலி தண்ணீர் பாட்டில்கள்? பாதுகாப்பு படை போலீசார் சோதனை
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 11:39 PM GMT)

மதுரை ரெயில் நிலையத்தில் போலி தண்ணீர் பாட்டில்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு படை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மதுரை,

ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே துறைக்கு சொந்தமான ரெயில்நீர் என்ற பெயரில் குடிதண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, ஒரு சில தனியார் நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல நிறுவனங்களின் பெயரிலும், ரெயில்நீர் என்ற பெயரிலும் போலி லேபிள் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ரெயில்வேக்கு புகார்கள் வந்தன.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரெயில்நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்ய ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 3 நாட்களாக ரெயில்நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள், ரெயில்களில் உள்ள உணவு தயாரிக்கும் பெட்டிகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு போலி தண்ணீர் பாட்டில்கள், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மதுரை கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, செங்கோட்டை, ராமேசுவரம், புதுக்கோட்டை உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை ரெயில்நிலையத்தில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள உணவு தயாரிக்கும் பெட்டியிலும் ஏறி தண்ணீர் பாட்டில்கள் குறித்து சோதனை செய்தனர். இதில், முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் இந்த சோதனை அனைத்து ரெயில்நிலையங்களிலும் தொடர்ந்து நடக்கும் என்று பாதுகாப்பு படை போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story