நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான், எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான், எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 July 2019 5:00 AM IST (Updated: 12 July 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

“நீட்” தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான் என்றும், எதிர்ப்பு எழுந்ததால் எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும் மதுரையில் அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை, 

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை மதுரை வந்தார். இதனை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன. தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்-தி.மு.க. தான். இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர். தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

சேலம் 8 வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல. மத்திய அரசின் திட்டம். இந்த திட்டத்தால் 70 கி.மீ. பயண தூரம் குறையும். இதற்கு முன்பு மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகள் நிலத்தை எடுத்து சாலை போடவில்லையா? வேண்டுமென்றே திட்டமிட்டு, இந்த திட்டம் வரக்கூடாது என்று நினைத்து செயல்படுகின்றனர்.

இந்த திட்டம் வந்தால் அ.தி.மு.க. அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதற்காக குறுகிய எண்ணத்துடன் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான அளவு இழப்பீடு கொடுக்கப்படுகிறது. கையகப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு கடந்த ஆட்சியை விட அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டு வரப்படுகிறது. இத்திட்டம் சேலத்திற்கானது மட்டுமல்ல. கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் அதற்கு பிறகு கேரள மாநிலம் கொச்சி வரை இந்த சாலை செல்கிறது. இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி ஏற்படும்.

ஒகேனக்கல் அருகே காவிரியில் அணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்யக்கூடாது என்றும் தீர்ப்பில் உள்ளது. எந்த அணையும் கட்டக்கூடாது.

வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார். மத்திய பட்ஜெட்டால் பெரிய அளவில் பாதிப்பில்லை. கடைகோடியில் இருக்கின்ற மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வதுதான் எங்கள் லட்சியம். அந்த லட்சியத்தின் அடிப்படையில் தான் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து அவர் காரில் நெல்லை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக பெருங்குடியில் மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், திருமங்கலத்தில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாநில பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் சாலைமுத்து, ஐ.பி.எஸ். பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து மண்டேலா நகரில் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பொருளாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Next Story