பொள்ளாச்சியில் பரபரப்பு, 5 வயது சிறுமி திடீர் சாவு - அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் மோதல்


பொள்ளாச்சியில் பரபரப்பு, 5 வயது சிறுமி திடீர் சாவு - அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் மோதல்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 11:39 PM GMT)

பொள்ளாச்சியில் 5 வயது சிறுமி திடீரென்று இறந்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (27). இவர்களுடைய மகள் மோனிஷா (5). சின்ராஜ் மனைவி செல்வியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். செல்வி தனது மகளுடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்த மோனிஷா திடீரென்று மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. உடனே செல்வி மற்றும் உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு மோனிஷாவை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஆனாலும் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மோனிஷாவுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வேறு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையில் அங்கு வந்த தந்தை சின்ராஜ், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதைதொடர்ந்து மோனிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சிறுமியின் உடலில் பல காயங்கள் இருப்பதால் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கு சிறுமியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கோவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கோவையில் இருந்து சட்டம் சார்ந்த மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் பேரானந்தம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டார். மாலை 4 மணி ஆகியும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் செல்வியின் உறவினர்கள் திரண்டனர்.

அவர்கள் திடீரென்று சின்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரும் மோதி கொண்டதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து மாலை 4.30 மணிக்கு டாக்டர் பேரானந்தம் தலைமையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை செய்ததில் சிறுமி உடல் நிலைசரி இல்லாமல் இருந்தது தெரிய வந்துள்ளது என்றனர். சிறுமியின் உடலை பார்த்து சின்ராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுது கண்ணீர் விட்டபடி மாலை அணிவித்து முதலில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சிறுமியின் உடல் செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் உடலை இருந்த ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரியை விட்டு செல்லும் வரை சின்ராஜ் உறவினர்களை வெளியே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமியின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகம் நேற்று காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story