ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் ஓமகுளம் மேல்கரை பகுதியை 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, செய்தி தொடர்பாளர் திருவரசு ஆகியோர் தலைமையில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து சப்-கலெக்டர் விசுமகாஜனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுக்க முயன்றனர். ஆனால் சப்-கலெக்டர் இல்லாததால், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் சிதம்பரம் சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமகுளம் மேல்கரை பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி சார்பில் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

எங்களது குடும்ப நலனை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று, நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Next Story