குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை தூர்வாரும் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - கலெக்டர் ராஜசேகர் உறுதி


குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை தூர்வாரும் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - கலெக்டர் ராஜசேகர் உறுதி
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை தூர்வாரும் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கலெக்டர் ராஜசேகர் கூறினார்.

மதுரை, 

மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43 கோடியே 12 லட்சம் செலவில் 135 கண்மாய்கள் தூர்வாரப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 90 சதவீத நிதியை மாநில அரசு வழங்கும். மீதமுள்ள 10 சதவீத நிதியை அந்த கண்மாயின் பாசனதாரர்கள் சங்கம் மூலம் பெறப்பட்டு செலவு செய்யப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பாசனதாரர்களுக்கான பயிற்சி வகுப்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பெரியாறு வைகை வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

பயிற்சிக்கு கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிமராமத்து பணிகள் அனைத்தும் பாசன விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படும். மேலும் மடைகளை பழுது பார்த்தல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கண்மாய்கள் சர்வே செய்யப்பட்டு, அவை தூர்வாரும் முன்பு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இந்த குடிமராமத்து பணிகள் நிறைவு பெறும்போது கண்மாய்களின் நீர் தேக்கும் திறன் அதிகமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மாயகிருஷ்ணன் உள்பட பாசனதாரர்கள் கலந்து கொண்டனர்.

Next Story