கோவில்பட்டியில் 230 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் 230 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 13 July 2019 3:30 AM IST (Updated: 12 July 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 230 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் 230 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

இலவச மடிக்கணினி வழங்கும் விழா

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் எவரெஸ்ட் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 230 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றி பெற வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 312 மாணவ-மாணவிகளுக்கு ரூ.28 கோடியே 61 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இந்த மடிக்கணினிகளை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும்.

உலகிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் தொடங்கினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் மனதைரியத்துடன் தேர்வுகளை எதிர்கொண்டு, வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் பரமசிவன், நகரசபை ஆணையாளர் அட்சயா, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பள்ளி இயக்குனர் ரதி முன்ஸ்ரீ, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை சாந்தினி நன்றி கூறினார்.

Next Story