மாவட்ட செய்திகள்

திருக்குறள் ஒப்புவித்து சாதனை:மாணவியின் குடும்பத்துக்கு பசுமை வீடுகட்டுமான பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார் + "||" + Thirukkural acknowledged achievement: Green house for student's family The construction work was started by the Collector

திருக்குறள் ஒப்புவித்து சாதனை:மாணவியின் குடும்பத்துக்கு பசுமை வீடுகட்டுமான பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருக்குறள் ஒப்புவித்து சாதனை:மாணவியின் குடும்பத்துக்கு பசுமை வீடுகட்டுமான பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்த மாணவியின் குடும்பத்துக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீட்டுக்கான கட்டுமான பணியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகில் உள்ள சு.நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நளாயினி (வயது 11). இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நளாயினி தந்தை அண்ணாதுரை கூலி வேலை செய்து மிக ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறார். தாய் சுதா வீட்டை கவனித்து வருகிறார். அண்ணாதுரை, சுதா தம்பதியினருக்கு மொத்தம் 6 குழந்தைகள். இதில் 4 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள்.

நளாயினி 3-வது குழந்தை ஆவார். இவர் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தாலும், படிப்பில் அதிக ஆர்வம் கொண்டு ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மிகவும் நன்றாக படித்து வருகிறார். இவரது சிறப்பு திருக்குறள் 133 அதிகாரத்தில் உள்ள 1330 குறள்களில் எந்த வரிசையில் எப்படி மாற்றிக் கேட்டாலும் அந்த குறளினை சரியாக ஒப்புவிப்பார்.

இவர் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும்போது அவரது ஆசிரியர் தினமும் 10 திருக்குறள் 3 முறை படிக்க வேண்டும். அடுத்த நாள் படித்த திருக்குறளை ஆசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் என பயிற்சி அளித்துள்ளார். இந்த பயிற்சி மாணவியை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது. நளாயினி தனது ஆசிரியரிடம் தான் அனைத்து திருக்குறளையும் படித்து பார்க்காமல் ஒப்புவிக்க பயிற்சி அளிக்க கேட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மாணவிக்கு 1,330 குறள்களையும் படித்து, ஒப்புவிக்கும் பயிற்சி படிப்படியாக அளித்துள்ளனர். இவர் 4-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவிப்பதில் முதல் பரிசு பெற்றார்.

அதனைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் திருக்குறள் ஒப்புவிப்பதில் பரிசுகள் பெற்று சாதனை புரிந்து வருகிறார்.

இதுமட்டும் அல்லாமல் மாணவி நளாயினி ‘சிவபுராணம்’ முழுமையாக பாடும் திறனையும் பெற்றுள்ளார். இவர் மாவட்ட கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது மாணவி தான் பெற்ற பரிசுகள், புகைப்படங்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நளாயினிக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

மேலும் நளாயினியிடம் குடும்பம் குறித்து கலெக்டர் கேட்கும் போது, அவரது ஏழ்மை நிலை மற்றும் மிகவும் சேதமடைந்த வீட்டில் குடும்பத்துடன் சிரமப்பட்டு வசித்து வருவதும் தெரியவந்தது. கலெக்டர் உடனடியாக மாணவியின் குடும்பத்திற்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சு.நல்லூர் கிராமத்திற்கு நேரில் சென்று நளாயினி குடும்பத்திற்கு கழிவறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் கலெக்டர் மாணவியின் திறமையை பாராட்டும் வகையிலும், அவரை ஊக்கப்படுத்தும் வகையிலும் 8 கிராம் தங்க சங்கிலி அணிவித்து, அவரிடம் புதிய எல்.இ.டி. டி.வி.யினை பரிசாக வழங்கினார்.

அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, துணை கலெக்டர் (பயிற்சி) தமயந்தி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை