தர்மபுரியில் அதிகாலையில் காலணி கடையில் தீப்பிடித்தது


தர்மபுரியில் அதிகாலையில் காலணி கடையில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 6:21 PM GMT)

தர்மபுரியில் அதிகாலையில் காலணி கடையில் தீப்பிடித்து எரிந்தது.

தர்மபுரி,

தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் வீட்டின் அருகே காலணி கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 3½ மணிக்கு அந்த கடைக்குள் தீப்பிடித்து புகை வெளியே வந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீவிபத்து குறித்து அறிந்த அஷ்ரப் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் கடைக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தால் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. மேலும் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. தீயில் கருகிய காலணி மற்றும் பொருட்களின் சேதமதிப்பு குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story