ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரியும் 4 யானைகள் பொதுமக்கள் அச்சம்
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 4 யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 4 காட்டு யானைகள் நீண்ட நாட்களாக சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த இந்த யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
இந்தநிலையில் 4 யானைகளும் ஒவ்வொன்றாக சானமாவு வனப்பகுதிக்கு மீண்டும் வந்தன. அவைகள் சானமாவு, பேரண்டப்பள்ளி வனப்பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. 4 யானைகளில் 3 யானைகள் 3 பேரை கொன்றுள்ளன.
மேலும், பொதுமக்களை கொன்ற யானைகளுக்கு சில அடையாளங்களை வைத்து அந்த யானைகளுக்கு கொம்பன், மார்க், சூளகிரி எக்ஸ்பிரஸ் என வனத்துறையினர் பெயரிட்டுள்ளனர். இந்த 4 யானைகளையும் எத்தனை முறை விரட்டியடித்தாலும் மீண்டும் அவைகள் இப்பகுதிக்கு வந்து விடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
4 காட்டு யானைகளும் சானமாவு, பேரண்டப்பள்ளி, கதிரேப்பள்ளி, ராமசந்திரம், புக்கசாகரம், ஆலூர் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றித்திரிகின்றன. யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்து மீண்டும் அவைகள் சானமாவுக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story